மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை
தந்தையொருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குப் விஷத்தை அருந்தக் கொடுத்துவிட்டு தானும் அதனை அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை - அங்குணுகொலபெலஸ்ஸ முறவசிஹேன பிரதேசத்தில் குறித்த சம்பவம் கடந்த (14.02.2024) ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதன்போது 50 வயதுடைய தந்தையும் 25 வயதுடைய மகனும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மகன் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதனால் சம்பவதினத்தன்று காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மகனை அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார் தந்தை.
இந்நிலையில், மனைவியும் மகளும் சமய நிகழ்வொன்றுக்காக வெளியே சென்றிருந்த வேளையிலேயே தந்தை தனது மகனுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு தானும் அதனை அருந்தியுள்ளார்.
மனைவியும் மகளும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கணவனும் மகனும் விஷம் அருந்தியிருப்பதை அறிந்து அயலவர்களின் உதவியுடன் அங்குணுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவின் பணிப்புரையின் பிரகாரம் அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.