கனடா தேர்தல்: வாக்களிக்க தேவையான முக்கிய தகவல்கள்
இன்றைய தினம் நடைபெறும் கனடாவின் பொதுத் தேர்தலில் அடுத்த அரசாங்கத்தை உருவாக்கப்போகிறார்கள்.
தேர்தல் நாளை முன்னிட்டு தெரிந்திருக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள் அறிவுறுத்தல் வழங்கப்பட்டள்ளது.
வாக்களிக்க தகுதி:
• நீங்கள் கனடிய குடிமகனாக இருக்க வேண்டும்.
• தேர்தல் நாளில் குறைந்தது 18 வயதைக் கடந்திருக்க வேண்டும்.
வாக்களிக்கும் நேரம்:
• தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகள் 12 மணி நேரம் திறந்திருக்கும்.
• நீங்கள் உங்கள் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
• நேர மண்டலத்தைப் பொருத்து திறப்பு நேரம் மாறலாம் என்று தேர்தல் கனடா தெரிவிக்கிறது.
அடையாள ஆவணங்கள்:
வாக்காளர்கள் தங்கள் அடையாளமும் முகவரியும் நிரூபிக்கக் கீழ்க்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்:
• ஓட்டுநர் உரிமம் அல்லது கனடா அரசாங்கம் (மத்திய, மாகாண/ பிராந்திய அல்லது உள்ளாட்சி) வழங்கிய பெயர், புகைப்படம் மற்றும் தற்போதைய முகவரி கொண்ட அடையாள ஆவணம்.
• இவை இல்லையெனில், இரண்டு வெவ்வேறு அடையாள ஆவணங்கள், அவற்றில் ஒன்று தற்போதைய முகவரியுடன் இருக்க வேண்டும்.
• இதுவும் இல்லையெனில், எழுத்தில் உங்கள் அடையாளத்தையும் முகவரியையும் உறுதிப்படுத்தி, உங்களுக்காக ஒருவர் சாட்சியம் செய்ய வேண்டும். அவர் அரசு வழங்கிய அடையாள ஆவணத்தை வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒரே நபருக்கே சாட்சி அளிக்க முடியும்.
வாக்காளர் தகவல் அட்டை:
• உங்கள் வாக்குச்சாவடியை அறிய, உங்கள் வீடிற்கு அனுப்பப்படும் வாக்காளர் தகவல் அட்டையைப் பார்க்கவும்.
• இந்த அட்டையில் எப்போது, எங்கு வாக்களிக்க வேண்டும், வாக்குச்சாவடியின் அணுகல் வசதிகள், முன்பே உதவியை கேட்கும் முறை மற்றும் உங்கள் அருகிலுள்ள தேர்தல் கனடா அலுவலகத்தின் முகவரி பற்றிய தகவல்கள் இருக்கின்றன.
• வாக்களிக்கும் நாளில் இந்த அட்டையுடன் ஏற்றுக்கொள்ளப்படும் அடையாள ஆவணத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.
வாக்காளர் தகவல் சேவை:
• வாக்காளர் தகவல் சேவை உங்கள் தேர்தல் மாவட்டத்திற்கான வரைபடம், போட்டியாளர்கள் பட்டியல் மற்றும் முந்தைய தேர்தல் முடிவுகளை வழங்குகிறது.
• உங்கள் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல், வாக்குச்சாவடிகளின் இருப்பிடம் மற்றும் உள்ளூர் தேர்தல் அலுவலக முகவரியையும் இது வழங்குகிறது.
இன்னும் பதிவு செய்யவில்லை என்றால்:
• நீங்கள் வாக்களிக்க பதிவு செய்யவில்லை என்றால், உங்கள் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நேரில் சென்று பதிவு செய்யலாம்.
வாக்களிக்க சிறந்த நேரம்:
• தேர்தல் நாளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வாக்களிப்பது சிறந்ததாக தேர்தல் கனடா அறிவுறுத்துகிறது.
• அதிகபட்ச நெரிசல் காலை ஆரம்பமும் மாலை 4 மணிக்குப் பிறகும் காணப்படும்.
மேலும் தகவலுக்கு:
• பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறைகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தேர்தல் கனடா இணையதளத்தை பார்வையிடலாம்.