நவம்பர் மாதம் ட்ரம்புக்கு காத்திருக்கும் அதிர்ச்சி; அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள இடைத்தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிரமான நாடு கடத்தல் கொள்கைகள், குடியரசுக் கட்சிக்கு பாரிய சவாலாக அமையும் என புதிய கருத்துக்கணிப்பு ஒன்று எச்சரித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 52 சதவீத அமெரிக்கர்கள் ட்ரம்ப்பின் நாடு கடத்தல் கொள்கைகளை ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப்பின் நாடு கடத்தல் கொள்கை
மாறாக, 42 சதவீதத்தினர் மட்டுமே அத்தகைய வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். குறிப்பாக, எந்தக் கட்சியையும் சாராத 57 சதவீத சுயேச்சை வாக்காளர்கள் இத்தகைய கடும்போக்கு நடவடிக்கைகளை எதிர்க்கும் வேட்பாளர்களையே தங்களின் தெரிவாகக் கொண்டுள்ளனர்.
கடந்த 2025 ஜனவரியில் ட்ரம்ப் பதவியேற்றபோது அவரது குடியேற்றக் கொள்கைகளுக்கு 50 சதவீத ஆதரவு காணப்பட்டது.
எனினும், கடந்த ஓராண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகள் மற்றும் அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் காரணமாக இந்த ஆதரவு தற்போது 40 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் முகமூடி அணிந்த மத்திய அரசாங்க முகவர்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, எதிர்பாராத விதமாக இரண்டு அமெரிக்கக் குடிமக்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மக்களின் குடியேற்றக் கொள்கை சார்ந்த நிலைப்பாட்டை ஆராயும்போது அவர்கள் இருவேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதையும் குடியேற்ற சட்டங்கள் கடுமையாகப் பின்பற்றப்படுவதையும் 84 சதவீத மக்கள் வரவேற்கின்றனர்.
அதேசமயம், குற்றப்பின்னணி ஏதுமின்றி அமெரிக்காவில் நீண்டகாலமாக வேலை செய்பவர்கள் சட்டப்பூர்வமாக அங்கேயே தங்குவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும் என 76 சதவீத மக்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில் 4,557 அமெரிக்கர்களிடம் இணையம் வாயிலாக நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள், எதிர்வரும் இடைத்தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.