நாடொன்றில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்; பீதியில் மக்கள்!
நேபாளம் பஜுரா மாவட்டத்தில் உள்ள தஹாகோட் என்ற பகுதிகளில் நள்ளிரவு 11.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.8 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் நோபாளத்தின் பஜுரா என்ற பகுதியில் இருந்து 81 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடு, கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து, சுமார் 2 மணி நேரம் கழித்து அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பஜுரா என்ற பகுதியில் அதிகாலை 1.30 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது.
இதற்கு முன்னதாக, நேபாளில் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நேபாளை திருப்பி போட்டது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 8,694 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 25 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இந்த நிலநடுக்கம் மக்கள் மனதில் இன்னும் மறையாத நிலையில், மீண்டும் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பீதியடைய வைத்துள்ளது.