கனடா தபால் திணைக்களத்தின் அதிரடி முடிவு: முதியோர் கவலை
கனடாவின் அஞ்சல் சேவைத் துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் முகவரிகளுக்கான வீட்டு விநியோகச் சேவையை நிறுத்த கனடா போஸ்ட் திட்டமிட்டுள்ளது.
கால்கரியைச் சேர்ந்த 79 வயதான ஜேனட் வீஸ் (Janet Wees), ஆண்டுக்கு 400 கடிதங்கள் எழுதும் பழக்கம் கொண்டவர். அண்மையில் இடுப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், இந்த மாற்றத்தால் முதியவர்கள் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.
குளிர்காலத்தில் பனி மூடிக்கிடக்கும் எனது வீட்டுப் பாதையைக் கடந்து, பொதுவான அஞ்சல் பெட்டி வரை சென்று கடிதங்களை எடுத்து வருவது எனக்குச் சாத்தியமற்றது என அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மின்னஞ்சல் மற்றும் டிஜிட்டல் சேவைகளால் கடிதப் போக்குவரத்து குறைந்து, கனடா போஸ்ட் பில்லியன் கணக்கில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
வீட்டு விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கான டாலர்களைச் சேமிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2026 இறுதி மற்றும் 2027 தொடக்கத்தில் ஒட்டாவா, வின்னிபெக் உள்ளிட்ட 13 பகுதிகளில் முதற்கட்டமாக 1,36,000 முகவரிகளில் இம்மாற்றம் அமலுக்கு வரவுள்ளது.
நேரடியாக அஞ்சல் பெட்டிகளுக்குச் செல்ல முடியாத உடல்நிலை பாதிப்பு கொண்டவர்களுக்கு, 'வசதி செய்து தரும் திட்டம்' (Accommodation Program) மூலம் தொடர்ந்து வீட்டிற்கே தபால் வழங்க வாய்ப்புள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் யார் தகுதியானவர்கள் என்பதைத் தீர்மானிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.