குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய 13 வயது சிறுவன்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் நகரில் கொலை குற்றவாளிக்கு அங்குள்ள மைதானத்தில் 80 ஆயிரம் பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 13 பேர் கொலை
கடந்த 10 மாதங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 குழந்தைகள் உள்பட 13 பேரை கொன்ற மங்கல் என்பவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து மங்கலுக்கு பொதுவெளியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் மூலம் கொலையாளியை துப்பாக்கியால் சுட்டு இந்த மரண தண்டனையை தலிபான்கள் நிறைவேற்றி உள்ளனர். மரண தண்டனையை நிறைவேற்றும்போது யாரும் வீடியோ கேமரா வசதி செல்போன்களை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் பலர் மரண தண்டனையை செல்போனில் வீடியோ எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதேவேளை கடந்த 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி அமைந்த பிறகு பொதுமக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் 11-வது மரண தண்டனை இதுவாகும்.