ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா நடவடிக்கை
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு யுத்தத்தால் பல லட்சம் பேர் அகதிகளாகும் சூழலில், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
ஆப்கான் மக்களுக்கு விசாக்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. இதே போல் இந்தியாவுக்கு ஆப்கானில் துணை நின்ற செய்தியாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள், போன்ற பலருக்கு விசா வழங்க இந்தியாவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கனடாவும் மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள் உள்பட 20 ஆயிரம் பேருக்கு விசா வழங்குவதாக அறிவித்துள்ளது.காபூலை தாலிபான் படைகள் நெருங்கி வரும் சூழ்நிலையில் துணை தூதரகங்களின் செயல்பாடுகள் குறித்தும் இந்திய வெளியுறவு அதிகாரிகள் தீவிரமான ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.