விமான எரிபொருள் விலை உயர்வு: விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, டொராண்டோ மற்றும் மாண்ட்ரியல் நகரங்களில் இருந்து நியூயார்க்கின் ஜான் எஃப். கென்னடி (JFK) சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஏர் கனடா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த தற்காலிக நிறுத்தம் வரும் ஜூன் 1-ஆம் திகதி முதல் அமலுக்கு வந்து, அக்டோபர் 25-ஆம் திகதி வரை தொடரும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மோதல் தொடங்கியதில் இருந்து விமான எரிபொருள் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.

இதனால், குறைந்த லாபம் தரும் சில வழித்தடங்கள் மற்றும் விமான சேவைகள் இனி பொருளாதார ரீதியாகச் சாத்தியமில்லை. எனவே, அதற்கு ஏற்ப விமான அட்டவணையில் மாற்றங்களைச் செய்து வருகிறோம் என ஏர் கனடா குறிப்பிட்டுள்ளது.
இந்த முடிவால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு, மாற்றுப் பயண விருப்பங்கள் குறித்துத் தெரிவிக்கப்படும் எனவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
எனினும், ஏர் கனடா தொடர்ந்து அருகிலுள்ள லா கார்டியா விமான நிலையம் (LaGuardia Airport) மற்றும் நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திற்கு (Newark Liberty International Airport) கனடாவின் ஆறு நகரங்களில் இருந்து தினமும் 34 முறை விமானங்களை இயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.