குடியிருப்பு பகுதியில் மோதி நெருப்பு கோளமான விமானம்: பயணிகள் நிலை?
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குட்டி விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் மோதி நெருப்பு கோளமாக வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தின் San Diego பகுதியிலேயே உள்ளூர் நேரப்படி இரவு 7.15 மணியளவில் குறித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. Learjet 35 என அடையாளம் காணப்பட்ட குறித்த குட்டி விமானமானது மின் கம்பியில் மோதி, பின்னர் குடியிருப்பு பகுதியில் விழுந்து நெருப்பு கோளமாக மாறியதாகவே தெரிய வந்துள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கியுள்ளது. மேலும், அந்த விமான விபத்தில் காயமடைந்தவர்கள் அல்லது மரணமடைந்தவர்கள் தொடர்பிலும், அதில் எத்தனை பேர்கள் பயணித்தார்கள் என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் குடியிருப்புகள் எதுவும் சேதமாகவில்லை என்றே தெரியவந்துள்ளது. குறித்த விமான விபத்தால் அப்பகுதியில் உள்ள 2,500 குடியிருப்பாளர்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தை அடுத்து மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னரே, விபத்துக்கான காரணம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளிவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.