கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் ஒரு இந்திய தம்பதியர் திருமணமாகி முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கனேடிய விமான நிறுவனம் ஒன்று அவர்களை மோசமாக நடத்தியுள்ளது.
ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் பார்வதி (Parvathy Radhakrishnan Nair) மிதுன் (Midhun Haridas) தம்பதியர், திருமணமாகி முதன்முறையாக டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்த அனுபவம், அவர்கள் இவ்வளவு நேரம் செலவிட்ட இனிமையான நேரத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கும் என அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

கனடா திரும்புவதற்காக, Punta Cana சர்வதேச விமான நிலையத்தில் Air Transat நிறுவனத்தின் விமானத்தில் ஏறுவதற்காக தம்பதியர் செல்ல, அங்கு அவர்கள் வித்தியாசமாக நடத்தப்பட்டுள்ளார்கள்.
பார்வதி அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி, தன்னிடம் இந்திய பாஸ்போர்ட்தான் உள்ளது, கனேடிய பாஸ்போர்ட் இல்லை, தாங்கள் அதற்கென தனியான வரிசை எதிலாவது நிற்கவேண்டுமா என தனது சந்தேகத்தை வெளிப்படுத்த, அவர்களை தனியாக நிறுத்திய வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் ஒருவர், ஒரு சிவப்புக் கோட்டுக்கு பின்னால் நிற்கும்படி கூறியிருக்கிறார்.
மற்றவர்கள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட பார்வதி, மிதுன் தம்பதியர் மட்டும் அங்கேயே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தாங்கள் வேண்டுமென்றே வித்தியாசமாக நடத்தப்படுவதை உணர்ந்த தம்பதியர், நடப்பதை வீடியோ எடுக்கத் துவங்க, அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் பார்வதியை திட்டியிருக்கிறார்.
தங்களிடம் பாஸ்போர்ட்டும் பயணச்சீட்டும் இருந்தும் ஏன் தங்களை மட்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என தம்பதியர் கேட்க, உங்களை விமானத்தில் ஏற அனுமதிக்கவேண்டுமானால் நீங்கள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அழிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அந்த அலுவலர்.
வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் ஏர் கனடா விமானம் ஒன்றில் விலை அதிகமான பயணச்சீட்டு வாங்கி தாமதமாக வீடு திரும்பியுள்ளனர் தம்பதியர்.
தாங்கள் சந்தித்த மோசமான விடயத்தை நீதிமன்றம் கொண்டு செல்ல முடிவு செய்த தம்பதியர், small claims court என்னும் நீதிமன்றத்தை அணுக, நடந்ததை அவர்கள் வீடியோ எடுத்ததற்காக Justice Marcel Mongeon என்னும் நீதிபதி அவர்களை பாராட்டியுள்ளார்.
இதுபோன்ற விடயங்களின்போது, வெறுமனே புகாரளிக்காமல், இதுபோல் வீடியோ ஆதாரங்கள் கொடுப்பதால், என்ன நடந்தது என்பதை நீதிபதி தனது கண்ணாலேயே பார்க்கமுடியும் என்றும் கூறியுள்ளார் நீதிபதி.
அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் பார்வதி மிதுன் தம்பதியரை நடத்திய விதத்தைக் கண்ட நீதிபதி விமான நிறுவனத்திடம் விளக்கம் கேட்க, தம்பதியரால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படுமென தாங்கள் எண்ணியதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அப்படி அவர்களால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றால், வீடியோவை அழித்துவிட்டால் உங்களை விமானத்தில் ஏற அனுமதிப்பேன் என அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் எப்படிக் கூறினார்? வீடியோவை அழித்துவிட்டால் பாதுகாப்பு பிரச்சினை சரியாகிவிடுமா?
அவர்கள் அதற்கு அடுத்தபடியாக ஏர் கனடா விமானத்தில் வீடு திரும்பியுள்ளார்களே, அவர்களால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றால் ஏர் கனடா விமான நிறுவனம் அவர்களை எப்படி விமானத்தில் ஏற அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி.
ஆக, பார்வதி, மிதுன் தம்பதியருக்கு Air Transat விமான நிறுவனம் 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.