விமான நிலையத்தை கைப்பற்ற திரண்ட மக்களால் வெடித்த திடீர் மோதல்
பெரு நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள மக்களில் டசின் கணக்கானோர் விமான நிலையத்தை கைப்பற்ற முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை பொலிவியா மற்றும் பெரு எல்லை அருகாமையிலேயே குறித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ஜூலியாக்காவில் உள்ள இன்கா மான்கோ கேபக் விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் டேங்க் ஒன்றை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை பதவி நீக்கம் செய்து கைது செய்த நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் துவங்கிய இந்த போராட்டத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது விமான நிலையத்தை கைப்பற்றும் நோக்கில் திரண்ட மக்களில் சிலர் பொலிஸ் டேங்க் ஒன்றை தீ வைத்து கொளுத்திய சம்பவத்தில் 2 பொலிசார் உட்பட 15 பேர் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தியதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த நிலையில் ஜூலியாக்கா விமான நிலையத்தில் இருந்து எந்த சேவையும் முன்னெடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் பெருவில் உள்ள மூன்று முக்கிய விமான நிலையங்களை போராட்டக்காரர்கள் மூட வைத்தனர்.
மட்டுமின்றி, தற்போதைய ஜனாதிபதி Dina Boluarte பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்து வருகின்றனர்.