தெற்காசிய வர்த்தகர்களை மிரட்டிய சர்வதேச கும்பல்: எட்மண்டனில் முக்கிய சூத்திரதாரி கைது!
கனடாவின் ஒன்ராறியோ மாகாணம் மற்றும் அமெரிக்காவில் வாழும் தெற்காசிய வர்த்தகர்களை இலக்கு வைத்து, துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்த சர்வதேசக் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சபல்தீப் சிங் என்ற இந்த நபர், எட்மண்டன் பொலிஸாரால் கடந்த மே 4ஆம் திகதி ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக நிறுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டார். அவர் பயணித்த காரில் இருந்து சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரோடு இருந்த மேலும் இரு நபர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள சபல்தீப் சிங்கிற்கு, ஒன்ராறியோவின் பிரம்ப்டன் மற்றும் அமெரிக்காவில் மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடும் 'போர் பிரதர்ஸ்' என்ற பயங்கரவாதக் கும்பலுடன் நேரடித் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர் மீது ஒன்ராறியோ பொலிஸாரால் 'கொலைச் சதி' மற்றும் 'மிரட்டிப் பணம் பறித்தல்' ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கனடா தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரம்ப்டன் நகரில் உள்ள தெற்காசிய வர்த்தக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எட்மண்டனில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது மேலதிக விசாரணைக்காக ஒன்ராறியோவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தெற்காசிய சமூகத்தினரை இலக்கு வைக்கும் இந்த மிரட்டல் கும்பல்களை ஒடுக்குவதற்காக, கனடிய பொலிஸார் 'புரொஜெக்ட் இன்சைட்' என்ற விசேட கூட்டு நடவடிக்கைத் திட்டத்தின் கீழ் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
மாகாண எல்லைகளைத் தாண்டி இக்குற்றவாளிகள் நடமாடுவதால், அனைத்து மாகாண பொலிஸ் பிரிவுகளும் இணைந்து உளவுத் தகவல்களைப் பகிர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இவ்விசாரணையில் கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது. இது குறித்துப் பேசிய முகவர் நிறுவனத்தின் அதிகாரி கிறிஸ்டின் கான்ராய், "2026 ஜூன் 18 ஆம் திகதி வரையிலான நிலவரப்படி, இந்த மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்களுடன் தொடர்புடைய 484 குடிவரவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். இதில் 139 பேருக்கு நாடுகடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே 81 வெளிநாட்டுப் பிரஜைகள் கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்" என்று அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.