ஆப்கானிஸ்தான் சிறையில் வாடிய அமெரிக்க பெண் ; விடுதலைக்கு உதவிய கத்தார்
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 இல் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதிகாரத்துக்கு வந்த பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கப் பெண் பாயே ஹால் என்பவரை தலிபான்கள் சிறைபிடித்தனர். ஆப்கனிஸ்தான் வந்த அவர் அனுமதியின்றி டிரோன் கேமரா உதவியுடன் அவர் படம் பிடித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை விடுவிப்பதற்கு அமெரிக்கா பல முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கிடையே அமெரிக்க அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே சமாதான தூதுவராக செயல்படும் கத்தார் நாட்டின் முயற்சியால் பாயே ஹால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் காபூலில் உள்ள கத்தார் தூதரகத்தில் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.