உணவுப் பழக்கத்தையே மாற்றவிருக்கும் கனேடியர்கள்: ஆய்வில் வெளியான காரணம்
பெரும்பாலான கனேடிய மக்கள் பிறக்கவிருக்கும் புத்தாண்டில் தங்கள் உணவுப்பழக்கத்தை முழுமையாக மாற்றவிருப்பதாக ஆய்வு ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளனர்.
கொரோனா பரவல் மற்றும் விலையுயர்வு காரணமாக பெரும்பாலான கனேடிய மக்கள் 2022ல் தங்கள் உணவுப்பழக்கம் மட்டுமின்றி உணவு வாங்கும் முறையையும் மொத்தமாக மாற்ற உள்ளனர்.
தனியார் அமைப்பு மற்றும் Dalhousie பல்கலைக்கழகம் முன்னெடுத்துள்ள குறித்த ஆய்வில் 9,999 கனேடியர்கள் பதிலளித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டைப் பொறுத்தமட்டில் உணவு பண்டங்களின் விலைகள் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், குறித்த ஆய்வில் பதிலளித்துள்ள கனேடியர்கள் 60.2% பேர்கள், உணவுப் பொருட்களின் விலைகள் உத்தேசிக்கப்பட்ட ஏழு சதவீதத்தை விட அதிகமாக உயரும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சுமார் 63% கனேடிய மக்கள் அடுத்த ஆண்டு முதல் தங்கள் உணவு வாங்கும் முறையை மாற்ற இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 52.8% மக்கள், இனி அடிக்கடி கூப்பன்களைப் பயன்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, 2022 முதல் வெளியே உணவகங்களுக்கு சென்று உணவருந்துவதை தவிர்க்க இருப்பதாக 51.7% மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சலுகைகள் விளம்பரங்களின் அடிப்படையில் இனிமுதல் உணவுப் பொருட்களை வாங்க இருப்பதாக 45.5% மக்கள் பதிலளித்துள்ளனர்.
31.9% கனேடியர்கள் 2022ம் ஆண்டில் வெவ்வேறு மளிகைக் கடைகளுக்குச் செல்வது குறித்தும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர்.
மட்டுமின்றி, 53.3% கனேடியர்கள் அடுத்த ஆண்டில் உணவுப் பொருட்களை வீணாக்காமல் இருக்க அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.