ஆட்சி மாற்றம் நடந்தால் மட்டுமே ஈரானுடன் உறவுகள் - கனடா
ஈரானில் “ஆட்சி மாற்றம்” நடைபெறாத வரை, அந்த நாட்டுடன் கனடா தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்தாது என கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனித ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஆட்சி மாற்றம் நடைபெறாத வரை நாங்கள் தூதரக உறவுகளைத் திறக்க மாட்டோம். அதுவே இறுதி முடிவு என ஆனந்த் கூறியதாக உள்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், பின்னர் அவரது அலுவலகமும் துறையும் அதே சொற்றொடரை மீண்டும் பயன்படுத்தவில்லை என்றாலும், அந்த கருத்தை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அரசு தனது மக்களை ஒடுக்கி, அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை மறுத்துக் கொண்டிருக்கும் வரை 2012ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்ட தூதரக உறவுகள் மீண்டும் நிறுவப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 முதல் இதுவரை, கனடா ஈரானுக்கு எதிராக 23வது சுற்று பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
இதேவேளை, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் Pierre Poilievre, “துணிச்சலான ஈரான் மக்கள் எழுந்து இந்த மோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவார்கள்” என கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
ஈரான்-கனடா உறவுகள் மீளுமா என்பது தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளைப் பொறுத்தே அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.