மீண்டும் 2,800 விமானங்கள் ரத்து: உலகம் முழுவதும் இறுகும் கட்டுப்பாடுகள்
கொரோனா பரவல் உலக நாடுகளில் உச்சம் பெற்றுவரும் நிலையில், திங்கட்கிழமை ஒரே நாளில் 2,800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் முதல் நாடாக தமது சர்வதேச எல்லைகளை மூடியது இஸ்ரேல், தொடர்ந்து ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.
கனடா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் நேரடி விமான சேவைகளை தடை செய்தது. இந்த நிலையில் திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் 2,800 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஆயிரம் விமானங்கள் அமெரிக்காவில் இருந்து அல்லது அமெரிக்காவுக்கு வந்து செல்லும் விமானங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, சுமார் 11,000 விமானங்கள் புறப்பட அல்லது வந்துசேர தாமதமாவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் மற்றும் கிறிஸ்துமஸ் அன்றும், அதன் அடுத்த நாளும் உலகம் முழுவதும் 6,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 5,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. மட்டுமின்றி, பயணிகள் பலர் திடீரென்று பயணத்தை ரத்து செய்யும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களின் சேவையில் 19% அளவிற்கு, அதாவது 133 விமானங்களை ரத்து செய்துள்ளது. ஆனால், ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டும், விமான சேவைகள் ரத்தானது மிகக் குறைவு எனவும் தெரிய வந்துள்ளது.
திங்களன்று பிரிட்டிஷ் ஏர்வேஸின் 46 விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் விமான சேவை நிறுவனமான லுஃப்தான்சா அதன் குளிர்கால விமான சேவை அட்டவணையில் 10% ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.