கொரோனா தடுப்பு மாத்திரைகளை பயன்படுத்த மற்றுமொரு நாடு ஒப்புதல்
ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மாத்திரைகளை (Paxlovid ) அவசரகால சிகிச்சைக்கு பயன்படுத்த தென்கொரியா ஒப்புதல் அளித்துள்ளது.
தென்கொரியாவில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 92 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்ட போதிலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட பைசர் நிறுவனத்தின் Paxlovid மாத்திரை சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அந்நாட்டு உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொரோனா பாதித்த 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 40 கிலோவிற்கும் அதிகமான எடைகொண்டிருப்பவர்களுக்கு இந்த மாத்திரை சிகிச்சை வழங்கப்பட உள்ளது.
இதேவேளை இந்த மாத்திரைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் இறப்பு ஏற்படும் அபாயத்தை 89 சதவீதம் வரை கட்டுப்படுத்துவதாக அண்மையில் வெளியாகிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.