ஆல்பெர்ட்டா மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி உயிரிழப்பு!
கனடாவின் ஆல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள ஒரு முக்கிய மருத்துவமனையில், சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மாகாண சுகாதார நிறுவனம் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஆல்பெர்ட்டா மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
ஆல்பெர்ட்டா மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் பிரையன் விர்ஸ்பா இது குறித்து சனிக்கிழமை அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த மே 8 ஆம் திகதி, எட்மண்டனில் உள்ள ராயல் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனைக்கு அந்த நபர் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் முதற்கட்ட சிகிச்சைகள் சில வழங்கப்பட்டன.

ஆனால், அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே ஸ்ட்ரெச்சர் இடவசதி இல்லாததால், அவர் வெளியே உள்ள காத்திருப்பு அறையிலேயே வைக்கப்பட்டு, சில மணி நேரங்களுக்குப் பிறகு அங்கேயே உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"இது மற்றொரு துயரமான நிகழ்வு. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபோன்ற இக்கட்டான சூழலில் தொடர்ந்து பணியாற்றுவது முன்வரிசை மருத்துவப் பணியாளர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஆல்பெர்ட்டா சுகாதார சேவைகள் (AHS) அமைப்பு விடுத்துள்ள மின்னஞ்சல் அறிக்கையில், தனியுரிமை காரணங்களால் உயிரிழந்த நபர் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது என்று மறுத்துவிட்டது. இருப்பினும், "AHS இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.
உயர்தரமான சிகிச்சை மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதுடன், தர உத்தரவாத மதிப்பாய்வும் நடத்தப்படும்" என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆல்பெர்ட்டா மாகாண மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகக் காத்திருந்து நோயாளிகள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல என தெரிவிக்கப்படுகின்றது.