ரொறன்ரோ ஹொட்டல் ஒன்றில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
ரொறன்ரோ பியர்சன் விமான நிலையம் அருகாமையில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஹொட்டலானது தனிமைப்படுத்தலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பீல் பொது சுகாதாரத்துறை, தொடர்புடைய ஹொட்டலை முழுமையான பயன்பாட்டுக்கு தடை விதித்து ஆணை வெளியிட்டது.
பீல் பொது சுகாதாரத்துறையின் கூற்றுப்படி, மே 8ம் திகதியில் இருந்தே குறித்த ஹொட்டலானது பிரிவு 22ன் கீழ் முழுமையாக செயல்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், கடந்த 14 நாட்களுக்குள் அந்த ஹொட்டலில் ஐந்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் எத்தனை ஹொட்டல் ஊழியர்கள் அல்லது விருந்தினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்ற தகவலை பீல் பொது சுகாதாரத்துறை வெளியிட மறுத்துள்ளது.
இதனிடையே, திங்களன்று ஹொட்டலின் முன் வாசலில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், சனிக்கிழமை முதல் இந்த ஹொட்டலானது சுகாதார பிரிவு அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
தற்போது கொரோனா பரவல் தொடர்பில் மூடப்பட்டுள்ள ஹொட்டலானது, கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தலுக்கான 20 ஹொட்டல்களில் ஒன்றாகும்.
நாடு திரும்பும் கனேடியர்கள் இந்த ஹொட்டல்களில் கண்டிப்பாக 3 நாட்கள் தங்க வைக்கப்பட்டு, பின்னர் கொரோனா சோதனைக்கு அனுப்பப்படுவார்கள்.
இதேப்போன்று இன்னொரு தனிமைப்படுத்தலுக்கான ஹொட்டலில் 13 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.