புத்த மடாலயம் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இராணுவம் ; பலர் பலி
மியான்மரில் புத்த மடாலயம் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயமுற்றனர்.
மியன்மார் ராணுவத்துக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் மியான்மரில் செயல்பட்டு வருகின்றன.

கிளர்ச்சியார்களை குறிவைத்து ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் தான் மத்திய மியான்மரில் உள்ள மியாவ்ங் பகுதியில் உள்ள ஸ்வெல் லே ஓ என்ற கிராமத்தில் நேற்று ராணுவம் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ராணுவப் போர் விமானம் ஒன்று 15 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகளை வீசியுள்ளது. இதில் இரண்டாவது குண்டு அருகில் இருந்த வீடு ஒன்றையும் சேதப்படுத்தியது.
தகவலின்படி, இத்தாக்குதலில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
பௌத்தர்களின் புனித காலத்தை குறிக்கும் வகையில் மடாலயத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வார கால தியானப் பயிற்சியில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.