மூன்று மிகப் பெரிய துயர சம்பவங்கள்... ஒரே மாதத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி
ஆசிய நாடுகளில் அக்டோபர் மாதத்தில் நடந்த மூன்று மிகப்பெரிய துயர சம்பவங்களால் மொத்தம் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் நடுவே ஏற்பட்ட கூட்ட நெரிசல், இந்தியாவில் தூக்கு பாலம் ஒன்று அறுந்து விழுந்த விபத்து மற்றும் இந்தோனேசிய விளையாட்டு அரங்கு ஒன்றில் பொலிசாரின் கண்ணீர் குண்டு வீச்சு சம்பவம் என அக்டோபர் மாதம் அதிர்வைத்துள்ளது.
சியோல் நகரில் சுமார் 100,000 மக்கள் திரண்ட ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 156 பேர்கள் இதுவரை மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட நிலையில், முன்னெடுக்கப்படும் முதல் கொண்டாட்டம் இதுவென கூறப்படுகிறது.
மேலும், இந்த மாபெரும் கூட்டத்தை கட்டுப்படுத்த வெறும் 137 பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே சம்பவயிடத்தில் களமிறக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தோனேசியாவில் அக்டோபர் 1ம் திகதி நடந்த கால்பந்து விளையாட்டின் போது ரசிகர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனை எதிர்கொள்ள தடுமாறிய பொலிசார், ஒருகட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீசியுள்ளனர். இதனால் பதற்றமடைந்த கூட்டம் விளையாட்டு அரங்கத்தில் இருந்து வெளியேற, கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 42,000 பேர் திரண்டிருந்த அரங்கத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் டசின் கணக்கான சிறார்கள் உட்பட 135 பேர் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.
இதேப் போன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தூக்கு பாலம் ஒன்று அறுந்து விழுந்ததில் 134 பேர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளனர். 143 ஆண்டுகள் பழமையான குறித்த பாலமானது கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே ஞாயிறன்று கோவில் திருவிழா கொண்டாட்டத்தின் போது கூட்டம் அதிகரிக்க, பாரம் தாங்காமல் பால அறுந்து விழுந்துள்ளது.