கனடா நோர்த் பேயில் தாக்குதல் சம்பவம்: போதைப்பொருட்கள், துப்பாக்கியுடன் இருவர் கைது!
கனடாவின் நோர்த் பே பகுதியில் இருவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, 100,000 டொலர்களுக்கும் அதிகமான மதிப்புடைய போதைப்பொருட்கள், லோட் செய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் திருடப்பட்ட பொருட்கள் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன், ஒரு ஆணையும் பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிளவில் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
தாக்குதலுக்கு இலக்கானவர்களில் ஒருவர் தடியால் தாக்கப்பட்டாரென்றும், மற்றொருவர் மீது கரடி விரட்டும் ஸ்ப்ரே அடிக்கப்பட்டாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் 'ட்ரவுட் லேக் வீதியில்' உள்ள குடியிருப்பு ஒன்றில் பொலிஸார் சோதனைக் பிடியாணையை அமல்படுத்தினர்.
அப்போது அங்கு தங்கியிருந்த சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். சந்தேகநபர்களின் வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஃபென்டானில் மற்றும் கிரிஸ்டல் மெத் ஆகிய ஆபத்தான போதைப்பொருட்கள் மற்றும் 9 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட .22 கலிபர் ரக 'ரிவோல்வர்' கைத்துப்பாக்கி மற்றும் கூடுதல் தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. உள்ளூர் வர்த்தக நிலையங்களில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் கணிசமான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.