9 வருடங்களின் பின்னர் கிறிஸ்மஸ் தீவிலிருந்து விடுவிக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள்!
ஆஸ்திரேலிய தடுப்புமுகாம்களில் சுமார் 9 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இரு அகதிகள் விடுதலைசெய்யப்பட்டு, அமெரிக்காவில் மீள்குடியர்த்தப்படுகின்றனர்.
ஈரான் பின்னணிகொண்ட மெஹ்டி அலியும், அவரது உடன்பிறவா சகோதரன் அட்னானும் தமது 15வது வயதில் இந்தோனேசியா ஊடாக கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்திருந்தனர்.
கிறிஸ்மஸ்தீவிலிருந்து பல தடுப்புமுகாம்களுக்கு மாற்றப்பட்ட இவர்கள், பின்னர் நவுறுவிற்கு அனுப்பப்பட்டு, அங்கு பல ஆண்டுகளைக் கழித்தபின் மருத்துவதேவை கருதி ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டு, ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட இவர்கள், பிரிஸ்பேனிலும் பின்னர் மெல்பன் பார்க் ஹோட்டல் என சுமார் 2 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
இதன்படி இவர்கள் இருவரும் உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டிருந்தபோதிலும், படகில் வந்த காரணத்தால் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படாமல் ஹோட்டலில் தமது வாழ்க்கையைக் கழிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா-அமெரிக்கா இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்கீழ், அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அகதிகளில் அலியும், அட்னானும் அடங்கியிருந்ததால், அவர்கள் அங்கு புறப்பட்டுச்சென்றுள்ளனர்.
இதுதொடர்பில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அலி, அமெரிக்காவில் தனது வாழ்க்கையைத் தொடங்குவதற்காக புறப்பட்டுச் செல்வதாகவும், தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரும் விடுதலையாகும்போதே தனக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அலியும், அட்னானும் மெல்பனில் தடுத்துவைக்கப்பட்ட பார்க் ஹோட்டலில், தடுப்பூசி விவகாரத்தில் நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த டென்னிஸ் நட்சத்திரம் நொவெக் ஜொக்கோவிச்சும் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னணியில், அங்கிருந்த அகதிகள் மீதும் ஊடக வெளிச்சம் பாய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.