ஈரானின் முக்கிய மின்சார கட்டமைப்புக்கள் மீது தாக்குதல் ; மிரட்டல்களால் அதிரும் மத்திய கிழக்கு
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ஃபஹான் மாகாணத்தின் முபாரகே பகுதியில் உள்ள முக்கிய எரிசக்தி மற்றும் தொழில்முறை கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த மாகாண ஆளுநர் மெஹ்தி ஜமால்நெஜாத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் உத்தியோகபூர்வ செய்திச் சேவையான IRNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ஃபஹான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களில் இதுவரை 25 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல்களின்போது, முபாரகே மாவட்டத்தில் உள்ள 914 மெகாவாட் மற்றும் 250 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு முக்கிய மின்சார உற்பத்தி நிலையங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் மீட்புப் படையினரும், அவசர காலக் குழுவினரும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்காவிட்டால் ஈரானின் மின்சார உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்படும் என வழங்கிய 48 மணிநேரக் கெடு முடிவடைந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதற்குப் பதிலடியாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் புரட்சிகர இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.