இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் மீது தாக்குதல்: பிரதமர் ஸ்டார்மர் எச்சரிக்கை
இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் பெரும் கலவரமாக மாறியுள்ள நிலையில் புலம்பெயர்ந்தோரை தாக்கியவர்களுக்கு பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘அமைதியான போராட்டம்’ என்று தொடங்கப்பட்ட பேரணி, சில சமூக விரோதிகளால் வன்முறையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer), “அமைதியாகப் போராட மக்களுக்கு உரிமை உண்டு, ஆனால் அது வன்முறைக்கு வழிவகுக்கக் கூடாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
சமீபகாலமாக, இங்கிலாந்தில் குடியேறுபவர்களுக்கு எதிராகப் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்று அமைதியான முறையில் நடக்கும் போராட்டங்கள் வன்முறைப் போராட்டங்களாக மாறும்போது, அது சமூக நல்லிணக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் ஸ்டார்மர், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அமைதியை நிலைநிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இங்கிலாந்தில் இத்தகைய வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருக்க, அரசு உடனடியாக தலையிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.