சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல முயற்சி; அமெரிக்கா குற்றச்சாட்டு
இந்தியாவின் முன்னாள் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தருக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்த சீக்கியர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தார் என என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நியுயோர்க்கின் தென்மாவட்டத்திற்கான அமெரிக்க சட்டத்தரணிகள் அலுவலகம் குர்பத்வந்த சிங்கினை கொல்ல முயன்றார் என விகாஸ் யாதவ்மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
வாடகைக்கு கொலை செய்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியுள்ளார்.
விகாஸ்யாதவிற்கு எதிராக முதல்முறையாக சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு சீக்கிய பிரிவினைவாதியை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டுகளுடன் இந்திய அரசாங்கத்தை நேரடியாக தொடர்புபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா தெரிவித்துவந்துள்ளது எனினும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியா எதனையும் தெரிவிக்கவில்லை.
அதேவேளை முன்னதாக இந்த வருடத்தில் இந்த சம்பவம் தொடர்பான குற்ற்ச்சாட்டுகளின் கீழ் நிக்கில் குப்தா என்பவர் பிராக்கிலிருந்து அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.