லண்டன் யூத சமூகத்தின் மீது தாக்குதல் முயற்சி; முக்கிய நபர் கைது!
லண்டனில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அவசர சிகிச்சை ஊர்திகள் (Ambulances) மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக, 37 வயதுடைய நபர் ஒருவரை லண்டன் மெற்போலிடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், டெவன் (Devon) பகுதியில் வைத்து நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

அவசர சிகிச்சை ஊர்திகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
தற்போது அவர் லண்டனில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் 23 ஆம் திகதி கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் ‘ஹட்சோலா’ (Hatzola) அவசர சிகிச்சை ஊர்திகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இதுவரை மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 8 பேர் மீது தீவைப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு பாரசீக மொழி ஊடக நிறுவனம் மீதும் எரியும் பொருட்கள் வீசப்பட்ட சம்பவமும் இதில் அடங்கும். ஈரான் நாட்டுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஹரக்கத் அஷாப் அல்-யமின் அல்-இஸ்லாமியா (Harakat Ashab al-Yamin al-Islamia) என்ற இஸ்லாமிய அமைப்பு, இந்த ஆம்புலன்ஸ் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் நடந்த சில சம்பவங்களுக்கும் இந்த அமைப்பே காரணம் என நம்பப்படுகிறது.
மேலும் லண்டன் மெற்போலிடன் பொலிஸின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் இத்தாக்குதல்கள் குறித்த விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.