கடற்கரைகளை மூடிய அவுஸ்திரேலியா ; அதிகாரிகள் எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள ஏராளமான கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.கனத்த மழை காரணமாக கடல் நீர் மங்கலானது என்றும் அது சுறாக்களை ஈர்த்திருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
கடந்த இரண்டு நாள்களில் சுறா தாக்கிய நான்கு சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள ஏராளமான கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன

சிட்னியிலில் (Sydney) ஆடவர் ஒருவர் கடலில் அலையாடியபோது சுறா அவரைத் தாக்கியது. அதையடுத்து கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் வடக்கே உள்ள மேக்வாரி துறைமுகத்தைச் (Port Macquarie) சுற்றியுள்ள கடற்கரைகள் மூடப்பட்டன.
அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அதிகாரிகள் தகவலளித்தனர். பெரும்பாலும் கோடைக்காலத்தில் ஆஸ்திரேலியாவின் கடற்கரைகளில் உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் எனக் கூட்டம் நிரம்பிவழிவது வழக்கம்.
மற்றொரு சம்பவத்தில் சிட்னியின் வடக்குக் கடற்கரைகளில் அலையாடிக்கொண்டிருந்த இருவர் சுறாக்களால் தாக்கப்பட்டனர். ஒருவரின் கால்களைச் சுறா கடித்தது. அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 20 சுறா தாக்குதல் சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் கடலில் மூழ்கி உயிரிழப்போர் எண்ணிக்கையைக் காட்டிலும் சுறா தாக்குதல்களால் மடிவோர் குறைவு.