அவுஸ்திரேலியாவில் காட்டு நாய்கள் சூழ சுயநினைவிழந்து கிடந்த கனேடிய பெண்: உடற்கூறு ஆய்வறிக்கை வெளியானது
கனடாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த விடயத்தில், அவரது உடற்கூறு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் (19) என்னும் இளம்பெண் சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் Fraser Island என்னும் K’gari என்னுமிடத்திலுள்ள கடற்கரை ஒன்றில் அவர் சுயநினைவின்றிக் கண்டெடுக்கப்பட்டார்.

பொலிசாருடன் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைந்த நிலையிலும், அவரைக் காப்பாற்ற இயலவில்லை, சிறிது நேரத்திற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.
அவர் விழுந்து கிடந்த இடத்தில், அவரைச் சுற்றி dingoes என அழைக்கப்படும் 12 காட்டு நாய்கள் நின்றதால், அவர் அந்த நாய்களால் கொல்லப்பட்டாரா என கேள்வி எழுந்தது.
இந்நிலையில், அவரது உடற்கூறு ஆய்வின் முதல் கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி, அவர் அந்த காட்டு நாய்களால் கொல்லப்படவில்லை என தெரியவந்துள்ளது.
அவரது உடலில், அவர் உயிரிழப்பதற்கு முன் ஏற்பட்ட காயங்களும், அவர் உயிரிழந்தபின் ஏற்பட்ட காயங்களும் உள்ளன.
என்றாலும், அவர் உயிரிழப்பதற்கு முன் காட்டு நாய்கள் அவரைத் தாக்கியதால் அவர் உயிரிழக்கவில்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
ஆகவே, அவர் எப்படி உயிரிழந்தார் என்பதை அறிவதற்கான விடயத்தை அறிந்துகொள்வதற்காக மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அவற்றின் முடிவுகள் வர பல வாரங்கள் ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.