பாகிஸ்தானில் பனிச்சரிவு ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் புதைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பனிப்பொழிவால் ஏற்பட்ட பனிச்சரிவுகள் கைபர், பக்துன்க்வா, பலுசிஸ்தான், கில்கிட்-பால்திஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.
சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. உறைபனிக்கு மத்தியில் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டன. கைபர் பக்துன்க்வாவில் உள்ள சித்ரால் மாவட்டத்தின் தெற்கே உள்ள செரிகல் கிராமத்தில் உள்ள டாமில் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பனிச்சரிவு ஏற்பட்டது.

இந்த பனிச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் புதைந்துள்ளனர். இதுதொடர்பாக துணை ஆணையர் வாஷிம் அசிம் கூறுகையில், இடிபாடுகளிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டதாகவும், ஒன்பது வயது சிறுவன் உயிர் பிழைத்ததாகவும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
20 அங்குலத்திற்கும் அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டதையடுத்து பனிச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பனிச்சரிவு கீழே சரிந்ததில், மக்கள்தொகை குறைவாக உள்ள மலைப்பாங்கான கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டைத் தாக்கியது.
பனிச்சரிவில் இறந்தவர்கள் பச்சா கான், அவரது மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், இரண்டு மருமகள்கள் என அடையாளம் காணப்பட்டனர். சித்ரால் மாவட்டத்தில் பனி அகற்றப்பட்ட பிறகு வெள்ளிக்கிழமை மாலை போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
சுமார் 18 மணி நேரம் மக்கள் சிக்கித் தவித்த நிலையில், பல சாலைகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அதிகப்படியான பனிப்பொழிவையடுத்து மக்கள் அன்றாட வாழ்வு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.