அடுத்தடுத்து ட்ரம்புக்கு வரும் சிக்கல் ; போர்க்கொடி ஏந்தும் காற்பந்து சங்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு வழங்கப்பட்ட 'ஃபிஃபா அமைதிப் பரிசை' (FIFA Peace Award) உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த விருதையே முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் நார்வே கால்பந்து சங்கத்தின் தலைவர் லிஸ் கிளாவனெஸ் (Lise Klaveness) அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.
கடந்த டிசம்பர் 6-ஆம் திகதி வாஷிங்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை குலுக்கல் விழாவில், ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ டிரம்பிற்கு இந்த விருதை வழங்கினார்.

அரசியல் நடுநிலைமை
நோபல் அமைதிப் பரிசுக்கு ட்ரம்ப் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவருடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள இன்ஃபான்டினோ, விதிமுறைகளை மீறி இந்த 'ஆறுதல் பரிசை' உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசியல் நடுநிலைமையுடன் இருக்க வேண்டிய ஃபிஃபா, உலகத் தலைவர்களுடன் "நெருக்கமான உறவை" பேணுவது அதன் விதிகளை மீறுவதாகும் என 'ஃபேர்ஸ்கொயர்' அமைப்பு புகார் அளித்துள்ளது.
இந்தப் புகாரை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள கிளாவனெஸ், "அமைதிப் பரிசை வழங்க ஃபிஃபாவுக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை; அதைச் செய்ய ஏற்கனவே தன்னிச்சையான நோபல் நிறுவனம் உள்ளது" என்று சாடியுள்ளார்.
வியாழக்கிழமை வான்கூவரில் நடைபெறவுள்ள ஃபிஃபா மாநாட்டிற்கு முன்னதாகப் பேசிய கிளாவனெஸ், ஒரு விருதை வழங்குவதற்கான தகுதி அளவுகோல்களைக் கூட ஃபிஃபா வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்திருப்பதை இன்ஃபான்டினோ சுட்டிக்காட்டிய போதிலும், கால்பந்து கூட்டமைப்புகள் இந்தத் தலையீட்டை விரும்பவில்லை.