மற்றுமொரு நாட்டிலும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக பயன்பாட்டுக்கு தடை!
வியட்நாமில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடுவது, கருத்துகள் தெரிவிப்பது மற்றும் விருப்பப் பதிவுகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்குத் தடை விதிக்க வியட்நாம் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உலகளவில் அதிகரித்து வரும் சர்வதேச முயற்சிகளின் ஒரு பகுதியாகவே வியட்நாம் இந்த முடிவை எடுத்துள்ளது.

சிறுவர்கள் பார்வையிடும் உள்ளடக்கங்கள்
16 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகக் கணக்குகள், அவர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் தகவல்களைக் கொண்டே பதிவு செய்யப்பட வேண்டும்.
சிறுவர்கள் பார்வையிடும் உள்ளடக்கங்கள் மற்றும் அவர்கள் செலவிடும் நேரத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோரையே சாரும். சமூக ஊடக நிறுவனங்கள் சிறுவர்களை அடையாளம் காணத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
மேலும், அவர்களின் வயதுக்குப் பொருத்தமான உள்ளடக்கங்கள் மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். வன்முறை, ஆபாசம், சூதாட்டம், போதைப்பொருட்கள் மற்றும் தற்கொலை தொடர்பான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து, எச்சரித்து, அவற்றுக்கான அணுகலைத் தடை செய்ய நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை அண்மையில், பிரான்ஸ் நாடாளுமன்றம் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைத் தடை செய்ய ஒப்புதல் அளித்ததுடன், அவுஸ்திரேலியா இத்தகைய தடையை முதன்முதலில் அமுல்படுத்திய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.