கனடாவில் இந்த மாகாணத்தில் விடுமுறை குறித்த சட்டத்தில் மாற்றம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாண அரசு, கடுமையான நோய் அல்லது காயம் காரணமாக வேலை செய்ய முடியாதவர்களுக்கு ஆண்டுக்கு 27 வாரங்கள் வரை ஊதியமில்லா விடுப்பு வழங்கும் வகையில் புதிய சட்ட மாற்றம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.
இந்த மாற்றம் வேலைவிதி சட்டத்தில் சேர்க்கப்படும் எனவும், சட்டம் நிறைவேறினால் இலையுதிர் காலம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் மாகாண முதல்வர் டேவிட் எபி தெரிவித்துள்ளார்.
பெரும் நோயறிகுறி அல்லது பாரிய சுகாதார பிரச்சினையை எதிர்கொள்வது வாழ்க்கையில் மிகக் கடினமானது என எபி கூறினார்.
“ஆனால் சிகிச்சை முடித்து மீண்டும் வேலைக்கு திரும்பும் போது உங்கள் வேலை உங்களுக்காக காத்திருக்கும் என்பதில் உறுதியாக இருப்பது – அது ஒரு பெரும் மனநிம்மதியை அளிக்கும்,” என அவர் கூறினார்.
இந்த மாற்றம், கீமோதெரபி போன்ற சிகிச்சை பெறும் பணியாளர்கள் தங்களின் ஆரோக்கியத்தை கவனிக்கத் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளும் வகையில் பாதுகாப்பளிக்கும் என எபி கூறினார்.
மனித உரிமைச் சட்டம் ஊனமுற்றவர்களுக்கு எதிரான பாகுபாட்டை தடை செய்கிறது. ஆனால் தற்போதைய வேலைவிதி சட்டம் நீண்டகால நோய் அல்லது காயம் காரணமாக வேலை செய்ய முடியாதவர்களுக்கு வேலை பாதுகாப்பை அளிக்கவில்லை.
இப்போது அந்த பாதுகாப்பை சட்டத்தில் நேரடியாக சேர்க்கிறோம் என தொழிலாளர் அமைச்சர் ஜெனிஃபர் வைட்சைட் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான நோயறிகுறி அல்லது வாழ்க்கையை மாற்றக்கூடிய சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஒருவருக்கு, தமது வேலை இழக்காது இருப்பார் என்ற உறுதி மிகுந்த நிம்மதியை அளிக்கிறது.
இது அவர்களின் மீட்பு பயணத்தில் தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்கும் என தெரிவித்துள்ளார்.