போலி பொக்கிமான் அட்டையால் 1 மில்லியன் டொலரை இழந்த வர்த்தகர்
உயர்மதிப்பு கொண்ட சேகரிப்புப் பொருட்கள் சந்தையில் அதிகரித்து வரும் மோசடி அபாயங்கள் குறித்து, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் ரிச்மண்ட் பகுதியைச் சேர்ந்த வர்த்தகரும் பொக்கிமான் அட்டை சேகரிப்பாளருமான ஜெஸ்ஸி பெங் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
போலி அட்டை ஒன்றினால் தனக்கு ஏற்பட்ட சுமார் 1 மில்லியன் கனடிய டொலர் இழப்பு தனக்கு ஒரு பாரிய பாடமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது மனைவியுடன் இணைந்து பொக்கிமான் அட்டை விற்பனை நிலையமொன்றை நடத்தி வரும் ஜெஸ்ஸி பெங், இத்துறையில் மிகவும் அரிதானதும் அனைவராலும் விரும்பப்படுவதுமான ‘Call of Legends Shiny Rayquaza’ என்ற அட்டையின், அட்டை தரப்படுத்தல் நிறுவனமான PSA வழங்கும் மிக உயர்ந்த தரச்சான்றான ‘PSA 10’ கொண்ட அட்டையைப் பெறுவதற்குப் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்துள்ளார்.

“இது உலகின் மிக அரிதான அட்டைகளில் ஒன்று” என அவர் தெரிவித்துள்ளார். பொக்கிமான் அட்டை தரகர் ஒருவர் ஊடாக, கிரிப்டோகரன்சி மூலம் சுமார் 935,000 கனடிய டொலர்கள் செலுத்தி அவர் இந்த அட்டையைக் கொள்வனவு செய்துள்ளார்.
“கடந்த காலங்களில் பெரிய கொடுக்கல் வாங்கல்களைச் செய்தவரும், நல்ல நற்பெயரைக் கொண்டவருமான ஒருவரிடமிருந்தே இதனைப் பெற்றேன். எனவே அட்டையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் அந்த இடைத்தரகரின் திறனை நான் நம்பினேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். கூரியர் மூலமாக அட்டை கிடைக்கப்பெற்ற போது, முதலில் பார்க்கும்போது அது உண்மையானது போலவே தோன்றியதாகவும், தனது கனவு அட்டை கிடைத்துவிட்டதாகத் தான் மகிழ்ச்சியடைந்ததாகவும் பெங் கூறியுள்ளார்.
எனினும், அதனை உன்னிப்பாகப் பரிசோதித்த போது, அதன் ‘PSA 10’ அங்கீகார லேபிளில் சில சிக்கல்கள் இருப்பதை அவர் அவதானித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, போலிச் சேகரிப்புப் பொருட்களைக் கண்டறிவதற்காகத் தனது தொழில்நுட்ப நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வரும் மென்பொருள் ஊடாக அந்த அட்டையை அவர் பரிசோதித்துள்ளார்.
“எமது மென்பொருள் ஊடாக அதனைப் பரிசோதித்த போது, அது போலி என எமது கட்டமைப்பு அடையாளம் காட்டியது. என்னால் அதனை நம்பவே முடியவில்லை, கடும் கோபமடைந்தேன். இதுவே போலியென்றால், எதுதான் உண்மையானது எனத் தோன்றியது” என பெங் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த 'PSA 10' அங்கீகார லேபிளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், உண்மையான லேபிள்களுடன் ஒத்துப்போகவில்லை என்றும், குறிப்பாக PSA பாதுகாப்பு லேபிளில் பயன்படுத்தப்படும் விசேட மை தவறானதாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த அட்டையை மறுபரிசீலனைக்காக பெங் PSA நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதனைப் பரிசோதித்த அட்டை அங்கீகார நிறுவனம் (PSA), அந்த அட்டை வைக்கப்பட்டிருந்த உறை (PSA holder) போலியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அதாவது, உள்ளே இருந்த அட்டை உண்மையானதாகக் கருதப்பட்டாலும், அது உண்மையான 'PSA 10' தரச்சான்று பெற்றதல்ல என்பதை PSA நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதனால் அந்த அட்டையின் சந்தை மதிப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.