மாணவிக்கு 1000 தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட ஆசிரியர்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், மாணவியுடன் நூற்றுக்கணக்கான தனிப்பட்ட செய்திகள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் மூலம் தவறான உறவை வளர்த்த ஆசிரியர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியருக்கு குறைந்தது 15 ஆண்டுகளுக்கு கற்பித்தலில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் தனியுரிமையைப் பாதுகாக்க ஆசிரியரின் பெயர் மற்றும் பள்ளி மாவட்டம் வெளிப்படுத்தப்படவில்லை.
ஆசிரியர் தனது அதிகாரம் மற்றும் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி, மாணவியை தனிப்பட்ட லாபத்திற்காக சீண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 மார்ச் மாதம், பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியபோது, பள்ளியின் மெசேஜிங் பிளாட்ஃபார்மில் மூன்று வாரங்களில் சுமார் 200 தனிப்பட்ட செய்திகள் பரிமாறப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
பல செய்திகள் இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை அனுப்பப்பட்டிருந்தன. இவை ஒருவரின் உடல் தோற்றத்தைப் புகழ்வது, மெதுவான நடனத்தைப் பற்றி பேசுவது போன்றவையாக இருந்ததாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
16 மாதங்களில் இருவருக்கும் இடையில் 1,000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் நடந்ததாகவும், பல அழைப்புகள் 1.5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் குறித்த ஆசிரியருக்கு இவ்வாறு பதினைந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.