கனடாவில் பரீட்சையில் மோசடி செய்ய உதவிய ஆசிரியைக்கு தண்டனை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தில், மாகாண அளவிலான பரீட்சையில் மாணவர்களுக்கு மோசடி செய்ய உதவிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியையொருவருக்கு ஐந்து நாள் இடைநீக்கம் விதிக்கப்பட்டுள்ளது.
பி.சி. ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையருடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு தீர்மானத்தின் அடிப்படையில், டாஷா டான் விட்னி (Tasha Dawn Whitney) தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த தீர்மானம் செவ்வாய்க்கிழமை இணையத்தில் வெளியிடப்பட்டது.

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒகனாகன் பகுதியில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய விட்னி, 12ஆம் வகுப்பு எழுத்தறிவு பரீட்சை (Grade 12 Literacy Assessment) தொடர்பாக மாணவருடன் குறுஞ்செய்தி பரிமாற்றம் மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பரீட்சை, மாணவர்கள் பட்டம் பெற கட்டாயமாக நிறைவு செய்ய வேண்டிய மாகாண மட்ட பரீட்சையாகும். வெளியிடப்பட்ட ஆவணத்தின் படி, “மாணவர் A, தமக்குப் பதிலாக வேறு யாராவது பரீட்சை எழுத வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த ஆசிரியர், மூன்று மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிடி ‘ஏதாவது’ எனக் குறிப்பிட்டார். குறிப்பிடப்பட்ட மாணவர்களில் ஒருவரே மாணவர் B” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை நடைபெற்ற நாளில், விட்னி மேற்பார்வையாளராக (invigilator) பணியாற்றினார். ஒவ்வொரு மாணவரும் ஒரு சாதனமே பயன்படுத்த வேண்டும், தனிப்பட்ட உள்நுழைவு தகவல்களையே பயன்படுத்த வேண்டும் மற்றும் தங்களது பரீட்சையைத் தாங்களே எழுத வேண்டும் என்பதை உறுதி செய்வது அவரது பொறுப்பாக இருந்தது.
ஆனால், மாணவர் B இரண்டு மடிக்கணினிகளை திறந்தவாறு மற்றும் கைப்பேசியுடன் பரீட்சை நேரம் முழுவதும் இருந்ததை விட்னி அனுமதித்ததாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கல்வி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இரண்டு தனிப்பட்ட உள்நுழைவு குறியீடுகளை – ஒன்று மாணவர் A கும் மற்றொன்று மாணவர் B கும் – மாணவர் A க்கு வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
பரீட்சை முடித்த மாணவர்களின் பட்டியலை பள்ளி முதல்வர் பரிசீலித்தபோது, மாணவர் A பரீட்சை எழுதியதாக பதிவாகி இருந்தாலும், அவர் அன்றைய தினம் பள்ளிக்கு வராதது கண்டறியப்பட்டது.
முதல்வரும் துணை முதல்வரும் நடத்திய விசாரணைகளின் போது, சம்பவம் குறித்து விட்னி மீண்டும் மீண்டும் பொய்யுரைத்ததுடன், தன்னுடைய பங்கினை குறைத்து காட்ட முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்ட விசாரணையிலும் அவர் இதேபோன்று நடந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் அவரது பணியாளர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஒழுங்குமுறை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
கடந்த மாதம் இணக்கப்பாட்டு தீர்மானம் கையெழுத்திடப்பட்டது. “மாணவர்களுக்கு செயற்பாடாக பரீட்சையில் மோசடி செய்ய உதவியதுடன், விசாரணை முழுவதும் நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டது ஆசிரியர் தொழிலின் நம்பகத்தன்மையை பாதிக்கிறது,” என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விட்னி இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாள் இடைநீக்க தண்டனையை அனுபவிக்கவுள்ளார். மேலும், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் எல்லைகள் தொடர்பான பயிற்சி நெறியை கட்டாயமாக நிறைவு செய்து, அதற்கான ஆதாரத்தை ஒழுங்குமுறை ஆணையரிடம் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.