அமெரிக்காவிற்கான பயணங்களை தவிர்க்கும் கனடாவின் இந்த மாகாண மக்கள்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கான பயணங்களை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கனடிய பயணிகளை நம்பி இயங்கும் எல்லை நகரங்களில் கடும் கவலை ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன் மாநிலத்தின் வடமேற்கு எல்லைப் பகுதியில் செயல்படும் அமெரிக்க பிராந்திய அரச அமைப்பான வாட்கம் கவுன்சில் ஆஃப் கவர்ன்மெண்ட்ஸ் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பிய வாகனங்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்த எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்தமாக 35 சதவீதம் குறைந்துள்ளது.
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த இந்த சரிவு, ஆண்டு முழுவதும் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வீழ்ச்சி, ப்ளேன் (Blaine), வாஷிங்டன் போன்ற எல்லை நகரங்களில் உள்ள வணிகங்களை கடுமையாக பாதித்துள்ளது.
அங்கு பார்சல் சேவை நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதுடன், ஒருகாலத்தில் வாடிக்கையாளர்களால் பரபரப்பாக இருந்த எரிபொருள் நிலையங்களிலும் தற்போது வருகை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கனடியர்கள் தெற்கே பயணம் செய்யாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் கனடிய டாலரின் மதிப்பு குறைவாக இருப்பது, கனடாவில் நுகர்வோர் கார்பன் வரி காரணமாக எரிபொருள் விலை சற்று குறைவாக இருப்பது போன்ற பொருளாதார காரணங்கள் இதில் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், முக்கிய காரணம் கனடியர்களின் அமெரிக்கர்களின் மீது இருந்த நம்பிக்கை உடைந்ததுதான் என ப்ளேன் நகர மேயர் மேரி லூ ஸ்டூவர்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக சுங்கப் போர் மற்றும் கனடாவை இணைப்பதாக வந்த மிரட்டல்கள், இந்த நம்பிக்கை முறிவுக்கு காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.