கனடாவில் உணவு தேடி வீட்டுக்கு வந்த கரடி... ஒரு காமெடி வீடியோ
கனடாவில் பசியால் வாடிய கரடி ஒன்று, உணவு தேடி வீடு ஒன்றிற்கு அருகில் வந்துள்ளது.
ஒன்ராறியோவிலுள்ள Sudburyயில் நடந்த இந்த வேடிக்கை சம்பவம், Ashley Larose என்பவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கமெராவில் பதிவாகியுள்ளது.
Ashley தங்கள் வீட்டை Halloween பண்டிகைக்காக செடி கொடிகள், பழங்கள் கொண்டு அலங்கரித்து வைத்திருக்கிறார். அவற்றில் பூசணிப்பழங்களும் அடக்கம்.
இந்நிலையில், பசியால் வாடிய கரடி ஒன்று அங்கு வந்துள்ளது. அது உள்ளதிலேயே பெரிய பூசணிப்பழம் ஒன்றைத் தூக்கிச்செல்ல முயலும் காட்சியை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
அந்த பூசணிப்பழம் மிகவும் பெரியதாக இருப்பதால் அந்த கரடியால் அதை தூக்கிச் செல்ல முடியவில்லை. அதைத் தூக்க முயன்று கரடியே கீழே விழும் காட்சிகளைக் கண்டால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
ஆனால், இது நகைச்சுவைக்குரிய விடயம் அல்ல என்கிறார்கள் வனவியல் நிபுணர்கள். இதுபோல் பூசணிப்பழங்களால் வீட்டை அலங்கரித்தால், அவற்றின் வாசனையால் கரடிகள் ஈர்க்கப்படும் அபாயம் உள்ளது என்கிறார்கள் அவர்கள்.
குறிப்பாக, கரடிகள் ஹைபர்னேஷன் எனப்படும் குளிர்காலத் தூக்கத்துக்குச் செல்வதற்குமுன், தங்களால் முடிந்த அளவுக்கு உணவு உண்ண முனையும் என்பதால், அப்படிப்பட்ட சூழலில் பூசணிப்பழங்களை வீடுகள் முன் வைப்பது கரடிகளை வரவேற்பது போலாகிவிடும் என்கிறார்கள் அவர்கள்.