கனடாவில் கரடி தாக்கி இருவர் பலி
கனடாவில் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின் வடக்கு சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள மெக்டாவிஷ் ஏரி (பகுதியில் கரடி தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சமூக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியான அமைச்சகத்தின் புதிய அறிக்கையில், தாக்குதலுக்குக் காரணமான கரடி கண்டுபிடிக்கப்பட்டு, அது கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த விலங்கின் உடற்கூறாய்வுக்காக அது 'வெஸ்டர்ன் காலேஜ் ஆஃப் வெட்டினரி மெடிசின்' மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

லா ரோஞ்ச் பகுதிக்கு வடக்கே வனவிலங்கு தாக்குதலால் இருவர் உயிரிழந்திருக்கலாம் என்ற செய்தி வெளியான மறுநாளில் இந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் பெயர்கள் தற்போதைக்கு வெளியிடப்படாது என்று அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 15 அன்று வனவிலங்கு தாக்குதல் குறித்து வந்த அழைப்பை அடுத்து, காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த மரணங்களில் எந்தவித சந்தேகத்திற்கிடமான பின்னணியும் இல்லை என்பதால், தற்போதைய விசாரணையை சஸ்காட்செவன் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி சேவைகளும் மரண விசாரணை அமைப்பும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.