ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறிய வடக்கு தமிழ் அரசியல்வாதிகள்
வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார்.
எனவே, வடக்கிலும், தெற்கிலும் மக்களை பிரித்தாளும் இனவாதத்தை தோற்கடித்து, முன்னோக்கி செல்ல தேசிய மக்கள் சக்திக்கு இம்முறையும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
யாழ். வேலணை பகுதியில் இன்று (02) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். " இன ஒற்றுமையை ஏற்படுத்தினால்தான் இந்நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.
எனவேதான் இந்த விடயத்துக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கி செயற்பட்டு வருகின்றோம். இந்நிலையில் வாக்கு அரசியலுக்காக மக்களை பிரித்தாளும் அரசியலை ராஜபக்ச அணி தெற்கில் முன்னெடுத்து வருகின்றது.
கடந்த காலங்களில் மக்கள் பாடம் புகட்டியும் அவர்கள் திருந்துவதாக இல்லை." - எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதேபோல வடக்கிலுள்ள சிலரும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி மக்களை பிரித்தாளும் பிரச்சாரத்தை செய்கின்றனர்.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்காக எமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பல இருக்க, எதுவுமே நடக்கவில்லை என்ற தொனியில் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் வடக்கிலும், தெற்கிலும் இனவாத அரசியலுக்கு மக்கள் இனியும் இடமளிக்கமாட்டார்கள் என்பது உறுதி.
அதற்கான சிறந்த செய்தியை மே 6 ஆம் திகதியும் வழங்க வேண்டும். வடக்கில் இருந்து இந்த செய்தி தெளிவாக செல்ல வேண்டும்." - எனவும் அவர் அழைப்பு விடுத்தார். அதேவேளை, தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இதுவரை காலமும் தீர்க்கபடாத தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு காணப்படும்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இந்த விடயம் தொடர்பில் கூடிய அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர்." - என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.