பணயக் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்
காசா பகுதியில் இருந்து முதல் கட்டமாக உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் வகித்த சமாதான உடன்பாட்டின் தொடக்க கட்டமாகும். இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டின் படி, இஸ்ரேல் சிறைகளில் உள்ள சுமார் 2,000 பாலஸ்தீன கைதிகள் மற்றும் தண்டனை பெற்றவர்கள் திங்கட்கிழமை மாலை விடுவிக்கப்படவுள்ளனர்.
அதன்பின், மற்ற 28 இஸ்ரேலிய கைதிகள் — 26 பேர் மரணமடைந்தவர்கள் மற்றும் 2 பேரின் நிலை தெரியாதவர்கள் — பின்னர் ஒப்படைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகளை காசாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைத்து, பின்னர் அவர்கள் இஸ்ரேலுக்குள் கொண்டு செல்லப்பட்டு, ஹெலிகாப்டர்களில் மத்திய இஸ்ரேலிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவார்கள் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
சுமார் 7 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் போராளிகள் விடுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா எல்லைக்கு அருகிலுள்ள ரெயிம் (Reim) இராணுவ முகாமில், கைதிகள் வரவிருப்பதாக அறிந்த மக்கள் இஸ்ரேல் கொடிகளை அசைத்து பெருமளவில் திரண்டுள்ளனர்.
அதேவேளை, டெல் அவீவிலுள்ள “ஹோஸ்டேஜஸ் சதுக்கம்” (Hostages Square) பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் கைத்தட்டலுடன், கைதிகளின் புகைப்படங்களைத் தாங்கி தஙக்ளதுமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.