ஒரே மாதத்தில் 22,000 வேலை வாய்ப்புகளை இழந்த நோவா ஸ்கோடியா
கொரோனா பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளால் நோவா ஸ்கோடியா மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் மே மாதத்தில் மிகப் பெரிய வேலை இழப்பைக் கண்டுள்ளன.
மே மாதத்தில் மட்டும் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் 22,000 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் இது 4.8% சரிவு என கணக்கிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சில்லறை வர்த்தகம், கல்வி தொடர்பான பணிகள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் நோவா ஸ்கோடியாவின் வேலையின்மை விகிதம் 1.7% அதிகரித்து தற்போது மே மாதத்தில் 9.8% என உயர்ந்துள்ளது.
மேலும், நோவா ஸ்கோடியாவின் வேலைவாய்ப்பு விகிதம் மே மாதத்தில் 54.2 சதவீதமாக இருந்தது, இது பிப்ரவரி 2020 ல் பதிவானதைவிட 3.3 சதவீத புள்ளிகள் குறைவாகும்.
ஏப்ரல் மாத பிற்பகுதியில் இருந்தே நோவா ஸ்கோடியா ஊரடங்கில் இருந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக கனடா மே மாத்தில் மட்டும் 68,000 வேலைவாய்ப்புகளை இழந்துள்ளது. இதில் 54,000 பகுதி நேர வேலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.