பில் கேட்ஸை வம்பிழுத்த எலான் மஸ்க் ; எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.
கடந்த 2019 இல் கைதாகி சில மாதங்களிலேயே நியூ யார்க் சிறையில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். இவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
அமெரிக்க நீதித்துறை உத்தரவுப்படி இந்த லட்சக்கணக்கான கோப்புகள் பகுதி பகுதியாக வெளியாகி வருகின்றன. அண்மையில் வெளியான கோப்புகளில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ரஷிய பெண்களுடன் பாலியல் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி, அதற்கு ரகசியமாக மருந்து எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, சமீபத்தில் தனது தொண்டு நிறுவனமான கேட்ஸ் பவுண்டேசன் ஊழியர்கள் மத்தியில் பேசிய பில் கேட்ஸ், தான் ரஷ்ய பெண்கள் இருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் எப்ஸ்டீனுடன் நட்பு கொண்டது தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் இதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த செய்தியை பகிர்ந்த ஒரு எக்ஸ் பயனர் "டெஸ்லா பங்குகளை வீழ்த்த நினைப்பவர்கள் நல்ல மனது உள்ளவர்கள் கிடையாது என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த டெஸ்லா நிறுவன தலைவர் மஸ்க் "கர்மா உண்மையானது" என்று பதிவிட்டுள்ளார்.