முதல் முறையாக இந்திய தொலைக்காட்சி தொடரில் தோன்றும் பில்கேட்ஸ்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டின் இணை நிறுவனர், பில்கேட்ஸ். அத்துடன் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மிகுந்த பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர்.
இந்த பணி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவின் பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரில் முதல் முறையாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் பில்கேட்ஸ்
அந்தவகையில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான ஸ்மிரிதி இரானி நடித்து வரும் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி 2' என்ற தொலைக்காட்சி தொடரில் பில் கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த தொடருக்கான முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. அதில் அந்த தொடரில் நடித்து வரும் ஸ்மிரிதி இரானி, யாரோ ஒருவருடன் வீடியோ காலில் பேசுகிறார். அவருடன் எதிர்முனையில் பேசியது பில்கேட்ஸ்தான் என பின்னர் ஸ்மிரிதி இரானி உறுதிப்படுத்தினார்.
இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும் அவர் கூறினார். முன்னதாக அமெரிக்காவின் பிரபல டி.வி. தொடரான 'தி பிக் பேங்க் தியரி' என்ற நிகழ்ச்சியிலும் பில்கேட்ஸ் தலைகாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.