கொரோனா பரவல் ஒருபக்கம்... பறவைக் காய்ச்சல் மறுபக்கம்: நெருக்கடியில் நாடுகள்
கொரோனா பரவலுக்கு நடுவே பறவைக் காய்ச்சலும் கண்டறியப்பட்டுள்ளதால் இஸ்ரேல் மற்றும் செக் குடியரசு நாடுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
செக் குடியரசு நாட்டில் இதுவரை பறவைக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டு 80,000 பறவைகள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி 100,000 பறவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலானவை கொல்லப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1 மில்லியன் அளவுக்கு முட்டைகளும் பாதுகாப்பு கருதி அழிக்கப்பட்டுள்ளது. இந்த ஓராண்டில் மட்டும் செக் குடியரசில் 48 முறை பறவைக் காய்ச்சல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடகிழக்கு ஸ்லோவேனியாவில் உள்ள ஒரு பண்ணையில் செவ்வாயன்று பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து குறித்த பண்ணை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்லோவேனியாவில் இந்த ஆண்டில் இது முதன்முறையாக பறவை காய்ச்சல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் பெல்ஜியம் மற்றும் பிரான்சில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன, மேலும் சுவிட்சர்லாந்திலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் 320,000 முட்டையிடும் கோழிகள் பறவைக் காய்ச்சலால் கொல்லப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர் 244,000 கோழிகள் நோய் பாதிப்பால் கொல்லப்பட்டுள்ளது. அத்துடன் 5,000 கொக்குகள் பறவைக் காய்ச்சல் காரணமாக கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.