கனடா முழுவதும் கடும் குளிர்கால வானிலை: பனிப்புயல், பலத்த காற்று, கடும் குளிர் எச்சரிக்கைகள்
கனடாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர்கால வானிலை நிலவி வருவதால், பனிப்புயல், பலத்த காற்று மற்றும் கடும் குளிர் தொடர்பான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
நயாகரா பிராந்தியம், காவார்த்தா லேக்ஸ், பீட்டர்பரோ, பாரி உள்ளிட்ட பகுதிகளில் பனிப்புயல் எச்சரிக்கைகள் அமலில் உள்ளன.
இப்பகுதிகளில் 20 முதல் 30 செ.மீ. வரை பனி பெய்யக்கூடும் எனவும், மேற்கு திசையிலிருந்து மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

டொரோண்டோ பெரும்பாக பகுதி, யோர்க் பிராந்தியம், வாட்டர்லூ, வெலிங்டன் கவுண்டி உள்ளிட்ட பகுதிகளில் பனியால் பார்வைத் தூரம் குறையும் அபாயம் குறித்து அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தெற்கு கியூபெக்கின் பெரும்பகுதிகளில், மொன்றியால் மற்றும் லாவல் உள்ளிட்ட நகரங்களில் பனிப்புயல் கண்காணிப்பு (watch) அமலில் உள்ளது. திங்கள்கிழமை மாலை பலத்த பனித்தூறல் காரணமாக பார்வைத் தூரம் பூஜ்ஜியமாகக் குறையக்கூடும்.
காற்று வேகம் மணிக்கு 70 கி.மீ. வரை உயரக்கூடும் என்றும், “பயணம் ஆபத்தானதாக இருக்கலாம்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு-மத்திய அல்பர்டாவின் பெரும்பகுதிகளில், ரெட் டியர், ட்ரம்ஹெல்லர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று எச்சரிக்கை அமலில் உள்ளது.
வடமேற்கு திசையிலிருந்து மணிக்கு 90 கி.மீ. வரை காற்று வீசக்கூடும் என்றும், இது திங்கள்கிழமை இரவு வரை நீடித்து செவ்வாய்க்கிழமை காலை பலவீனமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “உள்ளூர் மின் விநியோக தடங்கல்கள் ஏற்படக்கூடும்,” என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மனிடோபாவின் பெரும்பகுதிகளில், விணிபெக் உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளிர் எச்சரிக்கை அமலில் உள்ளது. காற்றுக் குளிர்ச்சி (wind chill) -40 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை திங்கள்கிழமை காலை முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ வான்கூவர் மற்றும் உள்நாட்டு வான்கூவர் தீவில் அடர்ந்த மூடுபனி காரணமாக பார்வைத் தூரம் கடுமையாகக் குறையும் அபாயம் உள்ளது.
வான்கூவர், பர்னபி, நியூ வெஸ்ட்மின்ஸ்டர், ரிச்ச்மண்ட், டெல்டா, லாங்லி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள் முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை பார்வைத் தூரம் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேல் நிலவும் உயர் அழுத்த மண்டலம் ஈரப்பதத்தை தரையில் தடுத்து வைத்திருப்பதே இந்த அடர்ந்த மூடுபனிக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.