ஆபிரிக்க கடலில் அதிர்ச்சி ; புலம்பெயர்ந்தோருடன் பயணித்த படகு கவிழ்ந்து எழுவர் பலி
ஆபிரிக்காவிலுள்ள காம்பியா கடற்கரைக்கு அப்பால் சுமார் 200 புலம்பெயர்ந்தோருடன் பயணித்த படகு கவிழ்ந்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காம்பியாவின் வடக்கு வங்கி பிராந்தியத்தில் உள்ள ஜினாக் கிராமத்திற்கு அருகில் புதன்கிழமை நள்ளிரவில் இந்தப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான அந்தப் படகு பின்னர் மணல் திட்டில் தரைதட்டிய நிலையில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவைச் சென்றடையும் நோக்கில் ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கிப் பயணித்த இந்தப் படகில் இருந்தவர்களில் இதுவரை 96 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய பயணிகளைக் கண்டறியும் நோக்கில் காம்பிய கடற்படையினர் மற்றும் ஒரு மீன்பிடி படகின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழந்த ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்டவர்களில் 10 பேர் கவலைக்கிடமான நிலையில் அவசர மருத்துவச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் பலர் காம்பியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆபிரிக்கப் புலம்பெயர்ந்தோர் ஐரோப்பாவை அடைய அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக மேற்கொள்ளும் இந்தப் ஆபத்தான பயணம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 47,000 பேர் கேனரி தீவுகளைச் சென்றடைந்துள்ளனர் என்பதுடன், இந்தப் பயணத்தின் போது 9,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் வட ஆபிரிக்க நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் காரணமாக, புலம்பெயர்ந்தோர் நீண்ட மற்றும் மிகவும் ஆபத்தான அட்லாண்டிக் பெருங்கடல் பாதையைத் தேர்ந்தெடுக்கத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேற்கு ஆபிரிக்கப் புலம்பெயர்ந்தோர் மற்றும் தஞ்சம் கோருபவர்கள் ஸ்பெயினின் கேனரி தீவுகள் ஊடாக ஐரோப்பாவிற்குள் நுழைய காம்பியாவை ஒரு பிரதான புறப்பாட்டுத் தளமாகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.