கிறிஸ்துமஸுக்கு முன் காணமல் போனவர் சடலமாக மீட்பு
கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் (River Ayr) உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை சுமார் 03.10 மணியளவில் இந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

CCTV காட்சிகளை ஆய்வு
உடலை முறைப்படி அடையாளம் காணும் பணிகள் இன்னும் நடைபெறவில்லை என்றாலும், காணாமல் போன 33 வயதான ஜேசன் ஆண்டர்சன் (Jason Anderson) என்பவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரேதப் பரிசோதனை அறிக்கை வரும் வரை, இந்த மரணம் “விளக்க முடியாதது” (unexplained) என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜேசன் ஆண்டர்சன் (Jason Anderson) கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி கேட்ரின் (Catrine) பகுதியில் கடைசியாகக் காணப்பட்டார். ஆறு நாட்களுக்குப் பின்னர் , கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி அன்று அவர் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் காணாமல் போனது முதல், காவல்துறை அப்பகுதியில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தும், வீடு வீடாகச் சென்றும் விசாரணை நடத்தி வந்தனர்.
காவல்துறை ஹெலிகாப்டர், ட்ரோன்கள் (Drones), மீட்புக் குழுக்கள்,குவாட் பைக்குகளில் (Quad bikes) சென்ற அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.