பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணம் பஸார் மாவட்டத்தில் உள்ள கர் என்ற இடத்தில் ஜமைத் உலெமா இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் இந்த அரசியல் கட்சியின் கூட்டத்தில் சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் குழுமியிருந்த போது கூட்டத்திற்கு நடுவே திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.
எங்கும் மரண ஓலம்
கூட்டத்தில் இருந்தவர்கள் மரண ஓலமிட்டு அங்கும் இங்கும் சிதறி ஓடினர். குண்டு வெடித்ததில் அப்பகுதி முழுவதும் ஒரு நொடி குலுங்கியது. இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் 44 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்ததுடன் தாக்குதலில் ஜமைத் உலெமா கட்சியின் முக்கிய தலைவரும் பலியாகினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கை கால்களை இழந்த நிலையில், பலரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடனடியாக பொலிசாரும் அவசரகால வீரர்களும் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணையில் இது மனித வெடிகுண்டு தாக்குதல் என தெரிய வந்துள்ளது.
எனினும் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.