இங்கிலாந்தில் நுழையும் உக்ரேனிய அகதிகளுக்கு போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை!
உக்ரேனிய அகதிகள் இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறினால் ருவாண்டாவிற்கு அனுப்பி வைக்க கட்டாயப்படுத்தப்படலாம் என்று போரிஸ் ஜான்சன்(Boris Johnson) ஒப்புக்கொண்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருந்து தப்பியோடிய மக்கள் படகுகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டால் ருவாண்டாவுக்கு விமான பயணம் உறுதி என்று பிரதமர் போரிஸ்(Boris Johnson) தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவில் குடியேற முயன்றவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் போரிஸ் ஜோன்சன்(Boris Johnson) நிர்வாகத்தின் முடிவை மனித உரிமைகள் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால் உக்ரேனிய மக்களுக்கு சிறப்பு விசா அனுமதி வழங்கியுள்ளது போரிஸ் ஜோன்சன்(Boris Johnson) நிர்வாகத்தின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
உக்ரேனிய மக்கள் ஆபத்தான படகு பயணத்திலும், குளிரூட்டப்பட்ட லொறிகளிலும் பிரித்தானியாவுக்குள் நுழையாத வரையில் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என பிரித்தானியா விளக்கமளித்துள்ளது.
இருப்பினும், துணைக்கு எவருமற்ற நான்கு வயது சிறுமியை போரிஸ் நிர்வாகம் உக்ரைனுக்கே திருப்பி அனுப்பியுள்ளது. ருவாண்டா தலைநகரில் ஊடகங்களை எதிர்கொண்ட போரிஸ் ஜோன்சன்(Boris Johnson), சட்டவிரோதமாக உக்ரேனிய மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்தாலும், அவர்களுக்கும் வெளியேற்றும் விமானம் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார்.
மேலும், பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ வழிகளை பின்பற்றாமல் பிரித்தானியாவுக்குள் குடியேற முயற்சிக்கும் மக்களுக்கு மட்டுமே ருவாண்டா பதிலாக இருக்க முடியும் என்றார்.
உக்ரேனியர்களுக்கு 130,000 விசாக்களை வழங்குகிறோம், அவர்கள் பிரித்தானியாவிற்கு வருவதற்கு குறைந்தபட்சம் இரண்டு நல்ல வழிகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.